Tuesday, April 17, 2007

27% இடஒதுக்கீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் அரசு மனு

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரும் மனுவை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது.

ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். உட்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு வரும் கல்வியாண்டு முதல் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்,1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் எத்தனை சதவீதம் என்பதை தீர்மானிக்க முடியாது. அதை முடிவு செய்யாதவரை 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அனைத்து கட்சிகளுடனும் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாடு, சட்டம் ஆகிய அமைச்சகங்களின் ஆலோசனையை பெற்று, இடஒதுக்கீடு தடையை நீக்க கோரும் மனுவை மத்திய அரசு தயாரித்தது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கையை இந்த மாதம் 21ஆம் நாளன்று இறுதி செய்யப் போவதாக ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அறிவித்தன. இதனால், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையை உடனே நீக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தடையை நீக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாகன்வதி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆகியோர், நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான பெஞ்ச் முன் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எல்லாவற்றையும் ஆலோசித்த பின்தான் அரசு முடிவு செய்தது. சமூக ரீதியாக மட்டுமின்றி பொருளாதாரம், கல்வி ஆகியவற்றிலும் பின்தங்கியுள்ள மக்கள், பொதுப் பிரிவினரை போல் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.

இடஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயரை நீக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் ஏற்க முடியாது. இந்திய சமூக வாழ்க்கை, சாதி அடிப்படையில் அமைந்துள்ளதை மறுக்க முடியாது. அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சமூகத்தின் மேல்தட்டு மக்களால் கடும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் வேறுபாடு உள்ளது. கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்களை நீக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. கடந்த 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க எடுக்கப்பட்ட முடிவிலும் தவறில்லை.

மேலும், இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளளன.

இடஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த மண்டல் கமிஷன், நாட்டில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

கடந்த மாதம் 29ஆம் நாளன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவால், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தடையை நீக்கவிட்டால், நாட்டில் சாதிப் பிரிவினை, ஆதிக்கச் சக்திகள் ஆகியவற்றால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விடும். அதனால், கடந்த 29ஆம் நாளன்று விதிக்கப்பட்ட தடையை உத்தரவு என்று கூறாமல் அரசுக்கு அறிவுரை என்று கூறப்பட்டால் சரியாக இருக்கும்.

மேலும், ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இந்த மாதம் 21ஆம் நாளுக்குள் மாணவர் சேர்க்கையை முடிவு செய்ய இருப்பதால் இந்த மனு மீதான விசாரணையை உடன் நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாக பல கேள்விகள் அடங்கியுள்ளது. அதனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி அரிஜித் பசாயத் கூறுகையில், கடந்த மாதம் 29ஆம் நாளன்று இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் கொண்ட பெஞ்சிடம்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
இடஒதுக்கீட்டுக்கு கடந்த மாதம் 29ஆம் நாளன்று நீதிபதிகள் அரிஜித் பசாயத், லோகேஸ்வர் சிங் பாந்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச்தான் தடை விதித்தது. ஆனால், பசாயத்தும் பாந்தாவும் சேர்ந்து உடனடியாக எந்த வழக்கையும் விசாரிக்கப் போவதில்லை. அதனால், மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கால தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் இந்த பிரச்னையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

--

3 comments:

Thamizhan said...

அதே நீதிபதிகளிடம் புதன் கிழமை விவாதிக்கப் போகிறார்கள்.நல்ல முறையில் வாதாட்டம் எடுத்துரைக்கப் போகிறார்கள்.
ஏற்கன்வே பாராளுமன்றத்திடம் மூக்கறு பட்டவர்.இப்போது அடங்குகிறாரா அல்லது அடக்கிவையுங்கள் பார்க்கலாம் என்கிறாரோ?
ஆகட்டும் பார்க்கலாம்.

Thamizhan said...

அதே நீதிபதி.அதே அடாவடித்தனம்.
இது நீதிமன்றமல்ல.எனது வீட்டு அடுப்பங்கறை.நான் வைத்ததுதான் சட்டம் என்கிற போக்கு.
இது சமுதாய வெடிப்பிலேதான் வெந்து விடியப் போகிறது.
போராடிய இனம் போராடிப் பெற வேண்டியதை சட்டத்திலே பெற முடியாது என்பதைக் காட்டுகின்றது.பார்ப்போம் இருபத்து மூன்றாம் தேதி.அரசு எவ்வளவோ தாழ்ந்து போய் வேண்டுகிறது,போட்டி வேண்டாம் என்று.ஆனால் அது நடக்காது போலத் தோன்றுகிறது.

Anonymous said...

தமிழன் அவர்களே, நீதிபதிகள் உங்களுடைய வேலைக்காரர்கள் அல்ல.அவர்களை வழி நடத்துவது அரசியல் சட்டமும், சட்ட மரபுகளும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளும். முடிந்தால் அவர் மீது பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வாருங்கள்.அதற்கு தைரியம் இருக்கிறதா.நீதிமன்றம் பெரியார் வீட்டு நாய் அல்ல, அது பெரியாரின் கைத்தடியுமல்ல.விடுதலையில் வீரமணி அரிப்பெடுத்து முட்டாள்த்தனமாக
எழுதினால் அதை இங்கும் வந்து வேறு வார்த்தைகளில் எழுதாதீர்கள்.