Monday, April 23, 2007

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா அரசியல் ரீதியாக தலையிட வேண்டும்


இலங்கை இராணுவத்தின் துணையுடன் தமிழர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க, இந்திய அரசு, அரசியல் ரீதியாக தலையிட வேண்டும் என்று இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி வந்த இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி 22-04-2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ப் பாண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இயக்கத் தலைவர் வீரமதுரகவி தலைமை தாங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்:

இலங்கையில் பத்திரி்கை சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் படும் கஷ்டங்கள் வெளியே தெரிவதில்லை. தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் இலங்கைக் காடுகள் இரப்பர் தோட்டங்களாகவும், பசுஞ்சோலைகளாகவும் மாறி, இலங்கைக்கு அன்னிய செலாவணியைப் பரிசாக தந்துள்ளது.

இன்று தலைநகர் கொழும்பு மட்டுமின்றி இலங்கையின் பிரத்யேக பகுதிகளிலும் இலங்கை அரசின் அடக்குமுறை மேலோங்கியிருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்து 1948-இல் இருந்து 6 மாதத்திற்குள்ளாகவே மலைப்பகுதியின் தமிழர் குடியுரிமைப் பறிக்கப்பட்டது. இதனால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தொடர் போராட்டம் காரணமாக 2002-ஆம் ஆண்டு மீண்டும் குடியுரிமை அளிக்கப்பட்டது.

போராட்டங்களின் இறுதிக் கட்டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறியுள்ளது. உச்சக்கட்டத்தை எட்டிய அடக்குமுறையால் யாழ்ப்பாணத்தில் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது. இப்படி நெருக்கடி நிலையில் புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவிக்கின்றனர்.

இந்தியா தலையிட்டால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதுவும் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை தான். இராஜீவ்காந்தி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதை இந்தியாவும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தால் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழப் பெண்களின் கற்பும், தமிழர்களின் பொருள்களும் சூறையாடப்படுகின்றன. விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாக கூறிக் கொண்டு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆயுத உதவியுடன் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் குண்டுமழைப் பொழிகிறது. இந்த நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நிச்சயமாக அமெரிக்கா, பாகிஸ்தான் சதியை அறுத்து சுமூகமான வாழ்வு தமிழர்களுக்கு கிடைக்கும்.

இந்தியா அரசியல் ரீதியாக தலையிட்டு தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இல்லையேல் தமிழீழம் உருவாவது என்பது தவிர்க்க முடியாதது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா:

ஒரு கோடி 80 லட்சம் பேர் இலங்கையில் உள்ளனர். அதில் 25 சதவீதம் பேர் தமிழர்கள் இருந்தனர்.

தற்போது அவர்கள் அகதிகளாவும், பல்வேறு காரணங்களாலும் இடம்பெயர்ந்ததன் விளைவாக 20 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழர்கள் உள்ளனர்.

ஜெர்மன், சுவீடன், கனடா நாட்டின் குரல்கள் இலங்கை தமிழர்களுக்காக ஒலிக்கும் போது இந்தியாவிலும் அதை எதிர்பார்க்கிறோம். இராஜீவ்காந்தி ஏற்படுத்திய ஒப்பந்தம் அடிப்படையில் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தோம். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இந்திய அரசு, அரசியல் ரீதியாக நேரடியாக தலையிட வேண்டும்.

இந்தியா, இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் வடகிழக்கு இணைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். இதை 7 கோடி தமிழர்களும் உணர வேண்டும். இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்தால் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

இந்நிகழ்ச்சியில் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கச் செயலர் ந.மு.தமிழ்மணி, பொருளர் லூ.அமலன், தமிழ்ஈழ விடுதலை இயக்கப் பொதுச்செயலர் பிரசன்ன இந்திரகுமார், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

1 comment:

Anonymous said...

உங்கள் பதிவை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாசிக்கும் ஐரோப்பியத் தமிழர்களில் நானும் ஒருவன். உங்கள் இரு கைகளையும் பற்றி நன்றி கூறுகின்றோம். பொறுப்பற்ற ஒரு சில இலங்கை/ தமிழக பதிவாளர்கள் பொறுப்பற்ற முறையில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கின்றனர். இதைத் தடை செய்யும் படி தமிழ்மணம் அமைப்பிற்கும் எழுதினேன். அவர்களும் பொறுப்பில்லாமல் இருக்கின்றார்கள். தயவுசெய்து பொறுப்பற்ற பதிவுகளை நீக்க ஆவன செய்யுமாறு தமிழ்மணத்தையும், பதிவாளர்களையும் கேட்டுக்கொள்ளவும்.

அன்புடன் குமரன்