Saturday, April 21, 2007

"அது ஒரு பொடா காலம்''- 2 சுப.வீரபாண்டியன்

(பகுதி - 2)

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் சென்னை ஐஸ் அவுஸ், நடேசன் தெருவில் உள்ள க்யூ பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கே துணைக் கண்காணிப்பாளர் சில கேள்விகளைக் கேட்டார். அங்க அடையாளங்களைக் குறித்துக்கொண்டார். பேச்சுவாக்கில், ‘‘நீங்கள் சிறைக்குப் போவது, இதுதான் முதல் முறையா?’’ என்று கேட்டார்.

‘‘இது முதல் முறை இல்லை’’ என்ற நான், சிறிய இடைவெளி விட்டு, ‘‘கடைசி முறையும் இல்லை’’ என்றேன். இந்த ‘அதிகப்பிரசங்கித்தனம்’ அவரிடமிருந்து ஒரு சிரிப்பை வரவழைத்தது. ‘திருத்த முடியாத ஆள் போலிருக்கிறது’ என்று நினைத்திருக்கக்கூடும். வேறு எதுவும் கேட்கவில்லை.

காவலர்களையும் ஆய்வாளரையும் பார்த்து, ‘‘உடனே புறப்படுங்க. கொஞ்ச நேரம் ஆச்சுன்னா விஷயம் தெரிஞ்சு பத்திரிகைக்காரங்க வந்துடுவாங்க’’ என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

மடமடவென்று வேலைகள் நடந்தன. என்னை அழைத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். மாடிப்படிகளைவிட்டுக் கீழிறங்கி வந்தவுடன், அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி!

வாயில் கதவுகளுக்கு வெளியே புகைப்படக் கருவிகளுடன், ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் தயாராக எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத காவலர்கள், எப்படி செய்தி கசிந்தது என்று விளங்காமல், என்னை அழைத்துக்கொண்டு பின்புறமாகச் சென்றனர். காவல் ஊர்தி பின்புறம் வரவழைக்கப்பட்டது. என்னை அதில் ஏற்றியதும், வாயில் கதவுகளைத் திறந்தார்கள். மின்னல் வேகத்தில், ஊர்தி அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டது.

பூவிருந்தவல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தை நோக்கி எங்கள் வாகனம் சென்றது.

இந்தப் பயணம் எங்கே தொடங்கியது என்று நான் நினைத்துப் பார்த்தேன்.

2002 ஏப்ரல் 7 அல்லது 8-ம் தேதியாக இருக்க வேண்டும். நானும், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தபோதுதான், இதற்கான தொடக்கம் ஏற்பட்டது.

நண்பர் சாகுலுடன் அவ்வப்போது இப்படி உரையாடுவது வழக்கம். கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்புத் தென்னரசன் ஆகியோரும் சில வேளைகளில் இணைந்துகொள் வார்கள். பல நிகழ்ச்சிகள், அடுத்த கூட்டங்கள் முதலானவை அங்கு முடிவு செய்யப்படுவதுண்டு. குறிப்பிட்ட அந்த நாளில், நாங்கள் இருவர் மட்டுமே!

‘தமிழ் முழக்கம்’ சார்பில், ஒவ்வொரு மாதமும் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை சாகுல் நடத்திக்கொண்டு இருந்தார். அந்தக் கூட்டம், வடபழனியில் உள்ள ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும். திருமண நாளாக இருந்தால் மண்டபம் கிடைக்காது என்பதால், ஒவ்வொரு மாதமும் ‘அஷ்டமி’யன்று கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பகுத்தறிவாளனாகிய நான், பஞ்சாங்கம் பார்த்து அஷ்டமி நாளை அவருக்குக் குறித்துக் கொடுப்பேன். அன்று, அடுத்த மாத ‘அஷ்டமிக் கூட்ட’த்தை எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.

முதலில், நூல்களுக்கான திறனாய்வுக் கூட்டமாகத்தான் அது நடந்தது. பிறகு, நல்ல திரைப்படங்களையும் திறனாய்வு செய்தால் என்ன என்று தோன்றியது. ‘அழகி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

ஏப்ரல் 8-ம் தேதி, எனக்குப் புதிய சிந்தனை ஒன்று தோன்றியது. 2002 பிப்ரவரி 22 அன்று, ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ‘புரிதல் ஒப்பந்தம்’ ஏற்பட்ட பிறகு, ஏப்ரல் 10-ம் தேதியன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உலகச் செய்தியாளர்களுக்கு, வன்னியில் பேட்டி அளிக்கப்போகிறார் என்னும் செய்தி, அன்று பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று ஆகும்.

‘அந்தப் பேட்டியை ஏன் இந்த முறை நாம் திறனாய்வு செய்யக் கூடாது’ என்று நான் சாகுலிடம் கேட்டதும், துள்ளிக்குதித்து விட்டார். அவருக்கு ஒன்று பிடித்து விட்டால், பிறகு வேறு எது குறித்தும் அவர் சிந்திக்க மாட்டார். அதைச் செய்து முடிக்கும் வரை, காரியமே கண்ணாயிருப்பார்.

அஷ்டமி, இடம் எல்லாம் மாறிப் போய்விட்டது. ஏப்ரல் 13-ம் தேதி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் திரையரங்கைப் பதிவுசெய்து விட்டார். நெடுமாறன் ஐயா, தேனிசை செல்லப்பா, புதுக்கோட்டைப் பாவாணன், கவிஞர் அறிவுமதி, வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தாயப்பன் அனைவரிடமும் அன்று மேடையில் பேசுவதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார்.

நான்கே நாள்கள் இடைவெளியில் நண்பர் சாகுல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அந்தப் பரபரப்பு, காவல்துறையிடம் ஓர் எச்சரிகை உணர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதனால், நெடுமாறன் ஐயா எழுதியுள்ள ‘தமிழீழம் சிவக்கிறது’ என்னும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாகச் சொல்லி, ஏப்ரல் 12-ம் தேதி மாலையே, சாகுலைக் காவல் துறையினர் கைது செய்து விட்டனர். ஏறத்தாழ 1,000 புத்தகங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்ட நூல் அன்று. ஏற்றுமதி, இறக்குமதிக்கு சாகுலிடம் முறையான உரிமமும் உள்ளது. ஆனால், அது பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், அவரைக் கைது செய்துவிட்டனர்.

அவரைக் கைது செய்துவிட்டால், விழா நடக்காது என்று அவர்கள் கருதியிருக்கலாம். விளைவு எதிர்மாறாக ஆகிவிட்டது.

மாலை 4 மணிக்கே, அரங்குக்குக் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. ஆறு மணியளவில் கூட்டம் தொடங்கிய போது, அந்த இடமே உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது.

அன்று காலைதான், ‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால், பொடா சட்டம் பாயும்’ என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாகக் கூட்டம் நடந்தது. அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதற்காகவே நெடுமாறன் ஐயாவும், நானும் கைது செய்யப்பட்டுள்ளோம்.

ஏப்ரல் 8-ம் தேதி, ஒரு உணவகத்தில் விழுந்த விதை, ஆகஸ்ட் மாதம் மரமாக வளர்ந்துவிட்டது. அதே நேரம், அந்தக் கூட்டம் ஒருவேளை நடக்காமல் இருந் திருப்பினும், வேறு ஒரு கூட்டத்தைக் காட்டி எங்களை அந்த அம்மையார் கைது செய்திருப்பார் என்பதே உண்மை.!

இவ்வாறு பல்வேறு வகையான சிந்தனைகளில் மூழ்கியிருந்த நான், காவல் ஊர்தி பூந்தமல்லி நீதி மன்றம் வந்துவிட்டதை உணர்ந்து, எண்ணங்களிலிருந்து விடுபட்டேன்.

நீதிமன்ற வாயிலில் என்னை எதிர்பார்த்து பரந்தாமன், திருச்சி சௌந்தரராசன், பத்மநாபன் முதலான இயக்கத் தோழர்கள் பலரும், என் அண்ணன் சுவாமிநாதன், என் மகன் இலெனின் ஆகியோரும் காத்திருந்தனர். எவரும் என்னை நெருங்குவதற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை.

ஏ.கே-47 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்னைச் சூழ்ந்து வர, நான் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கு, ஏதோ கார்கில் போரி லிருந்து, அந்நிய நாட்டுப் படை வீரனை அழைத்து வருவது போலிருக்கும்.

வழக்கைக் கேட்ட நீதிபதி, என்னை செப்டம்பர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஆணையிட்டார். எங்கள் வழக்கறிஞர் புருசோத்தமன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மகனை மட்டும் அருகில் வந்து பேச அனுமதிக்குமாறு நீதிபதி கூறினார். விடைபெற்றேன். பெரியப்பா மூவரிடமும், அத்தையிடமும், தம்பி பாரதிதாசனிடமும் செய்தியைக் கூறச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

‘க்யூ’ பிரிவு அலுவலகத்தில் ஏமாற்றமடைந்த இதழியலாளர்கள், இங்கு சரியாக வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். ‘‘சொல்லுங்கள், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று தொடர்ந்து கேட்டனர்.

ஓரிரு நிமிடங்களில் நிதானமாக நான் எண்ணியதைச் சொல்லி முடித்தேன்.

‘‘அங்கும் போர் நடக்கவில்லை. இங்கும் கலவரம் ஏதுமில்லை. பிறகு ஏன் பொடா என்று தெரியவில்லை. இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா என்றே சந்தேகம் வருகிறது. தமிழ் இங்கு கெட்ட வார்த்தையாகிவிட்டது. தமிழ் உணர்வாளர்களெல்லாம் இந்த அரசுக்குத் தீவிரவாதியாகத் தெரிகின்றனர். இந்நிலைமைகள் மாறியே தீரும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்’’ என்றேன்.

என்னை ஏற்றிக்கொண்டு ஊர்தி நகர்ந்தது. இயக்கத் தோழர்கள் முழக்கம் எழுப்பினர்.

எந்தச் சிறைக்குக் கொண்டு செல்கின்றனர் என்று தெரியவில்லை. அப்போது வைகோ வேலூரிலும், நெடுமாறன் ஐயா கடலூரிலும், கணேசமூர்த்தி மதுரையிலும், பாவாணன் கோவையிலுமாகப் பல்வேறு சிறைகளில் இருந்தனர். ‘நமக்குப் பாளையங்கோட்டையோ என்னவோ?’ என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

என் எண்ணத்துக்கு மாறாக, சென்னை நடுவண் சிறைக்கே என்னை அழைத்துச் சென்றனர்.

மதியம் 12.15 மணிக்கு நான் சிறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே சென்றபின், அந்தப் பெரிய கதவுகள் அடித்து மூடப்பட்டன.

அவை மீண்டும் திறக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பது, எனக்கு அப்போது தெரியாது!

(தொடரும்)

நன்றி: ஆனந்த விகடன், 24-04-2007.

1 comment:

Anonymous said...

ஈழத் தமிழர்கள் வரலாற்றில் மட்டுமல்ல உலகத்தமிழர் வரலாற்றில் மதிக்கப்படும் மனிதர் அவர். எங்களுக்காக குரல் கொடுக்கும் அனைவருக்கும்
நெஞ்சார நன்றிகள்.


ஒரு ஈழத் தமிழன்